பணத்தட்டுப்பாடு பிரச்சனை. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நாடாளுமன்றம் நோட்டீஸ்
- IndiaGlitz, [Friday,December 02 2016]
ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் மாற்று ஏற்பாடாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளிவந்த போதிலும் போதிய அளவில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பணம் தராததால் நாடு முழுவதும் பணத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் கணக்கில் உள்ள சம்பளத்தை கூட முழுமையாக எடுக்க முடியாத நிலை உள்ளது. பணத்தட்டுப்பாடு பிரச்சனை நீங்கி, இயல்பு நிலை திரும்ப இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் பணத்தட்டுப்பாடு குறித்து டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழு முன்பு நேரில் ஆஜராகி ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் கே.வி.தாமஸ் அவர்களின் உத்தரவில் நிதித்துறை செயலாளரும், பொருளாதார விவகாரத்துறை செயலாளரும் நேரில் ஆஜராகி பதில் தெரிவிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழு முன் ரிசர்வ் வங்கியின் கவர்னர் என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்பதை அறிய நாடே ஆவலுடன் காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.