கமல் கட்சியில் இணைகிறாரா தமிழிசை?
- IndiaGlitz, [Tuesday,March 13 2018]
நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. கட்சியில் சேர விரும்புபவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தும், உறுப்பினர் விண்ணப்பம் பூர்த்தி செய்தும் கட்சியில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், தனக்கு கமல் கட்சியில் இருந்து ஒரு இமெயில் வந்துள்ளதாகவும், அந்த மெயிலில் தான் அந்த கட்சியில் சேர்ந்ததாக குறிப்பிட்டதோடு, உறுப்பினர் எண்ணையும் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
கமல் கட்சிக்கு ஆட்கள் சேரவில்லை என்பதால் கிடைத்த இமெயில்களுக்கு எல்லாம் உறுப்பினராக சேர்ந்துவிட்டதாக கமல் கட்சியினர் அனுப்பி வைப்பதாகவும், என்னுடைய இமெயில் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்ற கேள்வியை எழுப்பி அவர் தனக்கு வந்த இமெயிலை பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.
இந்த நிலையில் இதுகுறித்து கமல் கட்சியின் நிர்வாகிகள் விளக்கமளித்தபோது, கட்சியின் இணையதள பக்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் எண் கொண்ட இமெயிலை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். அப்படியென்றால் கமல் கட்சியில் சேர தமிழிசை ஆன்லைனில் பதிவு செய்தாரா? என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் மிஸ்டு கால் கொடுத்து கோடிக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்த கட்சி பாஜக என்பதையும் நெட்டிசன்கள் குறிப்பிட தவறவில்லை.