மேலும் 2 நிர்வாகிகள் ராஜினாமா? என்ன நடக்கின்றது கமல் கட்சியில்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாக சமீபத்தில் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான குமரவேல் விலகினார். அவர் அளித்த பேட்டியில், கட்சியில் சிலர் கமலை மீறி அதிகாரம் செலுத்துவதாகவும், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் குமரவேல் விலகலை தொடர்ந்து மேலும் இரண்டு முக்கிய நிர்வாகிகள் தற்போது கமல் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கருணாகர ராஜா ஆகிய இருவரும் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசகம் என்பவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, வரும் தேர்தலில் பெறும் வாக்குகளை வைத்தே அதன் எதிர்காலம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருவது ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.