அசத்திய நான்கு வேட்பாளர்கள்: கமல்ஹாசனின் அடுத்த திட்டம் என்ன?
- IndiaGlitz, [Friday,May 24 2019]
நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்றரை வயது அரசியல்கட்சியான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கியது. திராவிட கட்சிகளுக்கு மாற்றை கடந்த பல ஆண்டுகளாக தேடி வரும் தமிழக மக்கள் கமல்ஹாசனின் வரவை நம்பிக்கையுடன் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை என்றாலும் ஆட்சி அதிகாரம், பணநாயகம் இவற்றையும் தாண்டி ஓரளவுக்கு கெளரவமான வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக ஐந்து தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அசத்தியுள்ளனர்.
குறிப்பாக கோயம்புத்தூர் தொகுதியில் ஆர். மகேந்திரன், ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஶ்ரீதர், தென்சென்னை தொகுதியில் ஆர்.ரங்கராஜன், வடசென்னை தொகுதியில் மெளரியா ஆகியோர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர்.
அதேபோல் மத்திய சென்னை, மதுரை, ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், திருச்சி, திருப்பூர், விருதுநகர், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர்.
சினிமா ஸ்டாராக இருந்தாலும் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்கும் மாயாஜாலம் தமிழகத்தில் முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களே ஒருசில வருடங்கள் காத்திருந்துதான் முதல்வராகினர். எனவே கமல்ஹாசன் இதே போன்று தனிப்பாதையில் மக்களை கவரும் வகையில் திட்டமிட்டு சென்றால் முதல்வர் என்ற இலக்கை தொட்டுவிடலாம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.