ஊதிய உயர்வு கேட்காத எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஊதிய உயர்வு மசோதா தாக்கல்
- IndiaGlitz, [Wednesday,January 10 2018]
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏழு நாட்களாக போராடி வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில் இன்று ஊதிய உயர்வே கேட்காத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு தரும் மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த நிலையில் இன்று அந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுவிட்டால் எம்.எல்.ஏக்களின் சம்பளம் ரூ.55ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக அதிகரிக்கும். அதாவது ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.50 ஆயிரம் சம்பள உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அரியர்ஸ் தொகையுடன் சேர்த்து ஒவ்வொரு எம்.எல்.ஏவும் இனி மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுவர். மேலும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ரூ.20 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெறுவர்.
ஒருசில ஆயிரம் ஊதிய உயர்வுக்காக போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருபக்கம் போராடி வரும் நிலையில் எம்.எல்.ஏக்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் உயரும் மசோதா இன்னொரு புறம் தாக்கல் செய்யப்படுவது பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.