போட்டியின்றி திமுக தலைவராகும் மு.க.ஸ்டாலின்: திமுக தொண்டர்கள் உற்சாகம்
- IndiaGlitz, [Monday,August 27 2018]
திமுக தலைவராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த கருணாநிதி சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து திமுகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு நேற்று மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுதாக்கல் செய்தனர். இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. மேலும் மனுக்களை வாபஸ் வாங்கும் காலமும் இன்றுடன் முடிந்துவிட்டது. எனவே திமுக தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த தேர்வை நாளை நடைபெறும் திமுக பொதுகுழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவிக்கவுள்ளார்.
கருணாநிதியின் வாரீசாக இருந்தாலும் 14 வயதில் இருந்தே கட்சிக்கு பணியாற்றி, மிசா காலத்தில் சிறையில் கொடுமைகளை அனுபவித்து படிப்படையாக கட்சியில் வளர்ந்தவர் மு.க.ஸ்டாலின் என்பதால் அவர் திமுகவின் அடுத்த தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்றே தொண்டர்கள் கருதுகின்றனர். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.