மின்கட்டணம் குறித்து கேள்வி எழுப்பிய பிரசன்னாவை பழிவாங்குவதா? முக ஸ்டாலின்
- IndiaGlitz, [Friday,June 05 2020]
நடிகர் பிரசன்னா சமிபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் மின்வாரியம் குறித்து பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மின்வாரியம் பிரசன்னாவின் கடுமையான விமர்சனத்திற்கு கண்டனமும் தெரிவித்திருந்தது. மேலும் பிரசன்னா மார்ச் மாத மின்கட்டணத்தை கட்டவில்லை என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நடிகர் பிரசன்னா வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். மின் வாரியத்தையோ அரசையோ குறை கூறுவது தனது உள்நோக்கமில்லை என்றும் உள்நோக்கமில்லாதபோதும் என் வார்த்தை மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மனம்நோகச் செய்திருப்பின் அதற்காக வருந்துகிறேன் என்றும் பிரசன்னா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியபோது, ‘நடிகர் பிரசன்னா மின் கட்டணம் பற்றி கேள்வி எழுப்பியும், அதற்கு முறையாக நியாயமான பதிலளிப்பதற்குப் பதில், பழிவாங்கும் விதமாக, அவரது மின் கட்டணத்தையே ஆய்வு செய்து, அரசியல் ரீதியான அறிக்கையை” ஒரு விளக்கமாகக் கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்திருந்தார்.
மேலும் பொதுமக்களிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பது கண்டனத்திற்குரியது என்றும், முந்தைய மாத கட்டணங்களை பேரிடர் நிவாரணமாக அறிவித்து மேலும் ஆறு மாதங்களுக்காவது மின் கட்டண சலுகைகளை வழங்கிட வேண்டும் என்றும் முக ஸ்டாலின் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.