எஸ்பிபிக்காக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த முக ஸ்டாலின்
- IndiaGlitz, [Friday,September 25 2020]
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று இசை ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும், அரசியல்வாதிகளும், பதவியில் இருக்கும் விஐபிக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே எஸ்பிபியின் மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது எஸ்பிபிக்காக தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்! என்று கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக எஸ்பிபி அவர்களுக்காக இரங்கல் தெரிவித்து முக ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது: பாடும் நிலா எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம். மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து அவர்! தம்பி சரணுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்! இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி!
தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற #SPBalasubrahmanyam அவர்களின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற @CMOTamilNadu ஆவன செய்ய வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) September 25, 2020