கவிப்பேரரசுக்கு உயரிய விருது… ஸ்டாலின் புகழாராம்!

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மலையாளப் பல்கலைக்கழகம் அம்மாநிலத்தின் உயரிய விருதான ஓ.என்.வி இலக்கிய விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. மலையாள எழுத்தாளர் அல்லாத ஒருவர் முதன் முதலாக இந்த விருதை பெற இருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.

கேரளத்தில் புகழ்ப்பெற்ற மலையாள எழுத்தாளரும் ஞானப்பீட விருது பெற்றவருமான ஓ.என்.வி குறுப் பெயரில் கடந்த 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஓ.என்.வி விருதை முதல் முறையாக தமிழ் கவிஞரும் எழுத்தாளருமான கவிப்பேரரசு பெறவுள்ளார். இந்த விருது குறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட அவர், “என் ஆறாம் பாட்டுக்கு நீங்கள் வழங்கிவரும் வரவேற்பால் என் மனசுக்குள் மயிலிறகு ஊர்கிறது” என நன்றி தெரிவித்து உள்ளார்.

மேலும் இந்த விருது அறிவிப்பை தொடர்ந்து வைரமுத்து அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். இந்தச் சந்திப்பைத் தொடர்நது கைவிப்பேரரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் வாழ்த்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் “தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் போல கேரளத்தின் புகழ்மிகு ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுப்படுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்து இருப்பதாகக் கருதுகிறேன்” எனக் கூறி இருக்கிறார். இதனால் தமிழ் கவிஞனனுக்கு மலையாள மொழி சிறப்பு சேர்த்து இருப்பது குறித்து பலரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கூடவே சகோதர மொழியின் சிறப்புகளையும் தற்போது பேசத் தொடங்கி இருக்கின்றனர்.