பெண்ணடிமை முடைநாற்றம் வீசிய காலத்தில் புரட்சி செய்தவர் முத்துலட்சுமி- முதல்வர் டிவிட்!
- IndiaGlitz, [Friday,July 30 2021]
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், முதல் சட்டமன்ற உறுப்பினர், பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர், இப்படி பெண்கள் சமூத்தில் பெரும் புரட்சியாய் கிளம்பிய முத்துலட்சுமி அம்மையாரின் 136 ஆவது பிறந்ததினம் இன்று. இந்த தினத்தில் முத்துலட்சமி அம்மையாரின் சேவையை மனப்பான்மையை பலரும் நினைவு கூர்ந்துவருகிறோம்.
அந்த வகையில் முத்துலட்சுமி அம்மையாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்த தான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கலனாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136 ஆவது பிறந்தநாள்… பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்” எனப் பதிவிட்டு உள்ளார்.
பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட அந்தக் காலத்திலேயே திண்ணைப் பள்ளியில் அடம்பிடித்து படித்தவர் முத்துலட்சுமி. பின்னர் கல்லூரியில் சேர விருப்பம் தெரிவித்து பல இடங்களில் விண்ணப்பித்தும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஒருவழியாக புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானின் தயவால் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் துவங்கினார்.
பின்னர் தனது தாயாரின் உடல்நிலை மோசம் அடைந்ததை நினைத்து வருந்திய இவர் ஒரு மருத்துவர் ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கடந்த 1907 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் துவங்கினார். தனது மருத்துவப் படிப்பில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். இப்படி இந்தியாவின் முதல் மருத்துவ மாணவியாகத் திகழ்ந்த இவர் கடந்த 1912 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகவும் உயர்ந்தார்.
மேலும் அரசியலில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். கூடவே பெண்ணடிமைத் தனத்திற்கு குரல் கொடுப்பது, அவர்களின் நல உரிமைகளுக்காக குரல் கொடுப்பது என தனது வாழ்நாளில் பெரும்பாலும் சமுதாய வாழ்க்கைக்காகவே அர்ப்பணித்தவர். அவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு அவருடைய சேவையை பாராட்டி வாழ்த்துவோம்.