திமுகவில் குடும்ப சண்டை ஆரம்பமா?
- IndiaGlitz, [Monday,August 13 2018]
ஒரு கட்சியின் தலைவர் மரணம் அடையும்போது அந்த கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பதில் குழப்பம் வருவது வழக்கமான ஒன்றே. எம்.ஜிஆர் மறைந்தபோதும், ஜெயலலிதா மறைந்தபோதும் அந்த குழப்பம் அதிமுகவில் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த நிலையில் திமுகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய நாளை அண்ணா அறிவாலயத்தில் செயற்குழு கூட்டம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கருணாநிதியின் நினைவிடத்தில் தனது குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியபோது, 'திமுக தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் தன்பக்கம் உள்ளதாகவும்,. தமிழகத்திலுள்ள திமுக விசுவாசிகளும் தனது பக்கம் இருந்து கொண்டு தன்னை ஆதரித்து கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார் மேலும் தன்னுடைய் அடுத்தகட்ட நடவடிக்கையை காலம்தான் பதில் சொல்லும்' என்றும் அவர் குறிப்பிட்டார்
திமுக செயற்குழு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தான் தற்போது திமுகவில் இல்லாததால் அதுகுறித்த கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மு.க.அழகிரி பதிலளித்தார்
திமுகவின் அடுத்த தலைவராக நாளை மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கும் நிலையில் திடீரென மு.க.அழகிரி திமுகவின் பெரிய பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுவதால் திமுகவில் குடும்ப சண்டை ஆரம்பமாகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.