ரஜினி கட்சியில் கருணாநிதி மகன்? மெகா திட்டம் தயார்!
- IndiaGlitz, [Wednesday,May 08 2019]
22 சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் குறைந்து ஐந்து தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறவில்லை என்றால் ஆட்சி கலைந்து சட்டமன்ற பொதுத்தேர்தல் வர அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறிய நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஒவ்வொரு பகுதியில் இருக்கும் முக்கிய பிரமுகர்களை தனது கட்சியில் இணைக்கும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, ரஜினி கட்சியில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளாராம். ரஜினியும், மு.க.அழகிரியும் நீண்ட நாள் நண்பர்கள் என்பதும், திமுகவில் இனி மு.க.அழகிரியை இணைக்க வாய்ப்பு இல்லை என்பதும் இந்த இணைப்பை எளிதாக்கியுள்ளதாக தெரிகிறது.
ரஜினி கட்சியில் மு.க.அழகிரி இணைந்துவிட்டால் தென் மாவட்டங்களில் திமுக, அதிமுகவுக்கு கடும் சவாலாக செயல்படலாம் என்பதே ரஜினியின் திட்டமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள முக்கிய பிரமுகர்களை இணைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் ஆட்சியை எளிதில் பிடித்துவிடலாம் என்பதே ரஜினி தரப்பினர்களின் திட்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.