இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஓய்வா? பரபரப்பு தகவல்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாகவும் கேப்டனாகவும் இருந்துவருபவர் மிதாலி ராஜ். இவர் கடந்த ஆண்டு அளித்திருந்த ஒரு பேட்டியில் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியே நான் விளையாடும் இறுதி சர்வதேசப் போட்டியாக இருக்கும் எனத் தெரிவித்து இருந்தார். தற்போது இன்னும் சில வாரங்களில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் மிதாலி ராஜ் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் வரும் மார்ச் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப்போட்டிக்கான பிளேயிங் 15ஐ ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் நியூசிலாந்து அணிக்கு எதிரான 4 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிக்கொண்ட தொடரில் விளையாட உள்ளனர்.

இதையடுத்து நியூசிலாந்து செல்லவுள்ள மிதாலி ராஜை சந்தித்த செய்தியாளர்கள் அவரது ஓய்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதிலளித்த மிதாலி ராஜ் இந்தப் பயணம் அற்புதமானது. எளிதானதாகவும் இருக்கவில்லை. கடுமையான போராட்டங்களோடு ஒரு முழுமையான வட்டத்திற்கு வந்திருக்கிறது. கடந்த 2000இல் நியூசிலாந்து நாட்டில் முதல் உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொண்டேன். அப்போது அரையிறுதி வரை சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பின்னர் பின்வாங்கியது.

தற்போது 6 ஆவது முறையாக உலகக்கோப்பை தொடரில் கலந்துகொள்ள இருக்கிறேன். ஆனால் இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் விளையாட உள்ளேன். ஓய்வைக் குறித்து பிறகு பார்ப்போம். அடுத்த 2 மாதங்கள் மட்டுமே என சிந்தனையில் இருக்கிறது என விளக்கம் அளித்திருக்கிறார். இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்ற வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்து இருக்கும் இந்தக் கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.