செம பிரில்லியண்ட் ஆட்டம்… நியூசிலாந்தை புகழ்ந்து தள்ளிய இந்திய ஜாம்பவான்!
- IndiaGlitz, [Thursday,November 11 2021] Sports News
டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அரைஇறுதி சுற்றுப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.
டி20 உலகக்கோப்பைக்கான அரைஇறுதிச் சுற்றுப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி நேற்று களம் இறங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ்வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. சார்ஜாவில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் ஃபீல்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால நியூசிலாந்தும் அதையே தேர்வு செய்தது.
இந்தத் தேர்வு மிகச்சரியாக இருந்ததால் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து பவுலர்கள் அதிரடியாக பந்து வீசி, இங்கிலாந்து வீரர்களை கலங்கடித்தனர். இதனால் ரன்களை எடுக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய மொயின் அலி அதிரடி காட்டினார். அவர் 37 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களோடு 51 ரன்களை குவித்து இருந்தார். இதனால் இங்கிலாந்து கடைசி 4 ஓவர்களில் மட்டும் 47 ரன்களை குவித்து 20 ஓவர் முடிவில் 166 இலக்கை நிர்ணயித்தது.
இதனால் 167 என்ற இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் தொடக்கம் முதலே சரிவை சந்தித்து 16 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். இதனால் 4 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டன. இதையடுத்து விளையாடிய டேர்லே மிட்செல் அதிரடி காட்டி 47 பந்துகளுக்கு 72 ரன்களை குவித்தார். இவருடைய அதிரடி ஆட்டத்தைப் பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் பிரபலங்கள் எனப் பலரும் வாயடைத்து போயினர். மேலும் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் “என்னவொரு பிரில்லியண்ட் கிரிக்கெட். போட்டியை வென்றதோடு இதயங்களையும் வென்றது நியூசிலாந்து. மிட்செலின் கிரேட் இன்னிங்ஸ், அவருக்கு உறுதுணையாக கான்வே, நீஷம் இருந்தனர். கடைசியில் கவுண்டரி எல்லையில் பேர்ஸ்டோவுக்கு நிகழ்ந்தது 2019 இறுதிப்போட்டியில் போல்ட்டுக்கு நிகழ்ந்ததை நினைவுபடுத்தியது எனத் தெரிவித்து உள்ளார்.
அதேபோல “இந்த உலகக்கோப்பையில் பிரமாதமான ஆட்டம்“ என்று சேவாக்கும் நியூசிலாந்தை புகழ்ந்துள்ளார். ஹர்பஜன் சிங், “தனித்துவமான போட்டி“ என்று குறிப்பிட்டு உள்ளார். இர்பான் பதான் “நியூசிலாந்து அணியில் சூப்பர் ஸ்டார்கள் இல்லை. 11 திடமான வீரர்கள் கொண்ட அணி. வெல் டன்“ என்று குறிப்பிட்டு உள்ளார்.