மாயமான சித்தார்த்தா உடல் நேத்ராவதி நதியில் கண்டெடுப்பு:
- IndiaGlitz, [Wednesday,July 31 2019]
பிரபல தொழிலதிபரும் காஃபி டே' நிறுவனத்தின் நிறுவனருமான சித்தார்த்தா நேற்று முன் தினத்தில் இருந்து காணாமல் போன நிலையில் இன்று காலை அவரது உடல் நேத்ராவதி நதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட காஃபி டே' கிளைகளை நிறுவி கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்தவர் சித்தார்த்தா. முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான இவரது நிறுவனங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் சித்தார்த்தா தனது வருமானத்திற்கு உரிய வரியை கட்டவில்லை என்று அவருடைய நிறுவனங்களில் ஒன்றான மைண்ட் டிரி நிறுவனத்தின் 75 லட்சம் பங்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான சித்தார்த்தா, நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் மனமுடைந்தார்.
இதனையடுத்து உருக்கமான கடிதம் ஒன்றை தனது குடும்பத்திற்கும், தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கும் எழுதிய சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரது கார் டிரைவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சித்தார்த்தா உடலை கடந்த 36 மணி நேரமாக மீட்புக்குழுவினர் தேடி வந்த நிலையில் இன்று காலை அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு தொழிலதிபரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.