முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் பாஸ் செய்த மாடலிங் அழகி: குவியும் பாராட்டுக்கள்
- IndiaGlitz, [Wednesday,August 05 2020]
ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் இந்த தேர்வில் வெற்றி பெற்றனர் என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக நடிகர் தமிழ் காமெடி நடிகர் சின்னிஜெயந்த் அவர்களின் மகன் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார் என்ற செய்தி தமிழக திரை உலகினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர் டெல்லியில் பட்டப்படிப்பு படித்து அதன் பிறகு இந்தூரில் முதுகலைப்பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலிருந்தே மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் கனவான சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதற்காக அவர் கடந்த 10 மாதங்களாக வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல் தேர்வுக்கு தயார் ஆனார்.
இந்த நிலையில் நேற்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் ஐஸ்வர்யா 93வது ரேங்க் பெற்றுள்ளார் என்பதும், முதல் முயற்சியிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறியபோது ’நான் ஐஸ்வர்யாராய் போல் மிஸ் இந்தியா, உலக அழகி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் மிஸ் இந்தியா போட்டியில் இறுதிவரை வந்தேன். ஆனாலும் எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் பாஸ் ஆக வேண்டும் என்பதுதான் வாழ்நாள் கனவு. தொடர்ந்து அதற்காக படித்தேன். எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல் சமூக வலைதளங்கள், டிவி, செல்போன் என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாக படித்து ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிட்டேன்’ என்று கூறியுள்ளார். மாடலிங் ஆக இருந்த ஐஸ்வர்யா தற்போது ஐஏஎஸ் அதிகாரியாகி இருப்பதற்கு அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.