விடுமுறையல்ல இது.. ஆபத்து.. என்ன சொன்னாலும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை..! விஜய பாஸ்கர்.
- IndiaGlitz, [Saturday,March 21 2020]
கொரோனா பாதிப்பு குறித்து எவ்வளவு சொன்னாலும் அதில் உள்ள ஆபத்தினை மக்கள் புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுதும் பரவியுள்ள கொரோனா வைரஸானது மக்களிடையே மிகவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 258 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தமிழக அரசானது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 நாட்கள் மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என கூறியிருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. ஐ.டி போன்ற தொழில் நிறுவனங்களானது தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் தமிழக மக்கள் இந்த ஆபத்தினை புரிந்துகொள்ளவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வீட்டிலேயே இருக்க வேண்டும் என விடுமுறை அளித்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா போல குடும்பத்துடன் வெளியில் சுற்றி வருகின்றனர். இத்தாலியிலும் இதே போலத்தான் மக்கள் இதை சாதாரண காய்ச்சலாக நினைத்தனர். ஆனால் 2 வாரங்கள் கழித்து கொரோனா தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியது. இன்று சிகிச்சை அளிக்க வழியில்லாமல் மக்கள் இறப்பதை அந்த அரசு தடுக்க எவ்வளவோ முயற்சி செய்து வருகிறது.
அங்கு நடப்பது போல இந்தியாவிலும் நடக்காமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினைக் கவனமாக கைக்கொள்ள வேண்டும்.