தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
- IndiaGlitz, [Monday,March 23 2020]
வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்த பயணிகள் பலருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பலர் இதனை கடைபிடித்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர் என்றும் அதிருப்தி தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், வீடுகளில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்ட பயணிகள் அரசின் அறிவுரையை மீறி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இதே போல் பிரதமர் மோடியும், கொரோனா நிலைமையை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக உள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள நகரங்களில் விதிகள், சட்டங்களை கடுமையாக மக்கள் பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் என்னதான் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் சுயகட்டுப்பாடு இல்லை என்றால் அரசு எடுத்த நடவடிக்கை அனைத்தும் வீணாகும் என்பதை அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.