அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி.. முதல் கையெழுத்து என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,December 14 2022]
தமிழக அமைச்சராக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கவர்னர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமைச்சராக பொறுப்பேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் முதல் கையெழுத்தாக விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு ஊதியத் தொகையை உயர்த்தும் கோப்பில் கையெழுத்திட்டார். இதுவரை 3000 ரூபாய் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இனி 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அதற்கான கோப்பில் தான் உதயநிதி கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி வாரிசு அரசியல் என்ற விமர்சனம் வந்து கொண்டுதான் இருக்கும் என்றும் ஆனால் அதற்கு நான் என்னுடைய செயல்கள் மூலம் பதிலடி கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் தான் தனது கடைசி படம் என்றும், அமைச்சராகிவிட்டதால் பொறுப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் உதயநிதி தெரிவித்தார். மேலும் கமல் நடிக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தேன் என்றும், ஆனால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் உதயநிதி தெரிவித்தார்.