சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்: தமிழக அமைச்சரின் சர்ச்சை பேச்சு
- IndiaGlitz, [Monday,August 13 2018]
திமுக தலைவர் கருணாநிதி கடந்த வாரம் காலமான சோகத்தில் இருந்து இன்னும் திமுகவினர் மீண்டு வரவில்லை. இந்த நிலையில் தமிழக அமைச்சர் உதயகுமார், 'சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்' என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த வாரம் காலமானபோது அவரது உடலை நல்லடக்கம் செய்ய மெரீனாவில் இடம் கேட்டு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மணிமண்டபம் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி தமிழக அரசு கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் இரவோடு இரவாக ஜெயலலிதா நினைவு மண்டபம் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் மூலம் மெரீனாவில் இடம் பெற்று கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து இன்று ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், 'ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட முயற்சித்த போது வழக்கு மேல் வழக்கு போட்ட திமுக, கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றனர். இப்போது ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டுவதற்கு எந்தவித தடையும் இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம் கிடைக்கிறது' என்று கூறினார். அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.