தமிழகத்தில் இலவச வீடுகள் யாருக்கு வழங்கப்படும்? ஏன் இந்த சலுகை?

  • IndiaGlitz, [Sunday,September 12 2021]

தமிழ்நாட்டின் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசியபோது, தமிழகத்தில் ஆறு, ஏரி போன்ற ஆக்கிரமிப்பு பகுதிகளில் வாழும் மக்களை அப்புறப்படுத்தும்போது அவர்களுக்கு இலவச வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த வீடுகளுக்கு அந்த மக்கள் பணம் தர தேவையில்லை.

மேலும் 2 முறைகளில் வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வழங்கப்படுகின்றன. அந்த வீடுகளுக்கு பணம் செலுத்துவது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகச் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில் அளித்தார்.

அதில், குடிசைமாற்று குடியிருப்பு என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் மூன்று விதமான பயனாளிகளுக்கு வீடுகள் தருகிறோம்.

அதாவது 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிதிலமடைந்த கட்டிடங்களை எல்லாம் இடித்துவிட்டு அங்கே குடியிருந்து வரும் மக்களுக்கு மீண்டும் வழங்கும் திட்டம் ஆகும். இதில் பயனாளிகள் 1.50 லட்சம் பங்கு தர வேண்டும்.

இரண்டாவது திட்டம் வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்கிற ஏழை மக்கள் வீடுகள் வேண்டும் என்றால் அந்த திட்டம் 11 லட்சம் ரூபாய் என்றால் 8.50 லட்சம் அரசு பங்கு. மீதியுள்ள பங்கை பயனாளிகள் கொடுக்க வேண்டும்.

ஏழைகள் மொத்தப் பணத்தை கொடுக்க முடியாது என்பதால் நாங்களே வங்கி மூலம் கடன் பெற்று தருகிறோம். மாதம் மாதம் ஏழைகள் பணம் கட்டலாம் என்கிற உத்தரவை போட்டு இருக்கிறோம்.

மூன்றாவது ஆக்கிரமிப்பில் வசிப்பவர்கள். ஆற்று ஓரங்களில் மற்றும் நெடுஞ்சாலை ஓரமாக வசிப்பவர்கள் ஆகியோரை அப்புறப்படுத்தி மாவட்ட கலெக்டர்கள் மூலம் எவ்வளவு வீடுகள் வேண்டும் சொல்கிறார்களோ அவர்களுக்கு வீடுகள் வழங்குகிறோம். இந்த வீடுகளுக்கு நதிகள் சீரமைப்பு திட்டம் மூலம் பணம் கொடுத்துவிடுவார்கள் என்பதால் பயனாளிகள் பணம் கொடுக்க தேவையில்லை.

மேலும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் யாருக்கு தர சொல்கிறார்களோ அவர்களுக்கு நாங்கள் வீடுகளை ஒதுக்கீடு செய்கிறோம். அவர்கள் மட்டும் பணம் தர வேண்டியதில்லை.

இதனால் ஒருசில பயனாளிகள் அவர்களுக்கு மட்டும் ஏன் பணம் வாங்கவில்லை? எங்களுக்கு மட்டும் பணம் கேட்கிறீர்களே? என்று வாக்குவாதம் செய்கின்றனர். ஆனால் மேற்சொன்ன 3 முறைகளில் தான் வீடுகள் வழங்கப்படுகிறது. பயனாளிகள் நிச்சயம் பங்கு கொடுக்க வேண்டும். இது அரசின் விதி.

இவ்வாறு தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோஅன்பரசன் பதில் கூறினார். தமிழக அமைச்சரின் அறிவிப்பு மூலம் சமீபகாலமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பயனாளிகளிடையே நிலவி வந்த குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு கலெக்டர் பரிந்துரையின் மூலம் இலவச வீடுகள் வழங்கப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.