அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினாரா தமிழக அமைச்சர்?
- IndiaGlitz, [Tuesday,May 01 2018]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது அரசியல் வாரீசாக அஜித் வருவார் என வதந்திகள் பரவியது அனைவரும் அறிந்ததே. ஆனால் அஜித்துக்கு அரசியல் இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சமூக வலைத்தள பக்கத்தில் இன்று அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அஜித்துக்கு தமிழக அமைச்சர் ஒருவர் பிறந்த நாள் வாழ்த்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுவிடப்பட்டதாகவும், அஜித்துக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு கருத்தை முகநூலில் பதிவு செய்துவிட்டு பின்னர் அந்த கருத்து தனது அட்மினால் போடப்பட்டது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.