10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
- IndiaGlitz, [Monday,April 20 2020]
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மார்ச் 24-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. எனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்தார்.
பத்தாம் வகுப்பு தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் இந்த மதிப்பெண்களை வைத்துதான் பதினோராம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் காலேஜ் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர முடியும் என்பதால் பத்தாம் வகுப்பு தேர்வை கண்டிப்பாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில்தான் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதே போன்ற ஒரு முடிவைத்தான் மத்திய அரசும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு எடுத்துள்ளது. எனவே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படாது, ஊரடங்கு உத்தரவு முடிவடைந்தபின் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மே 3ஆம் தேதிக்கு பிறகு தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து அறிவிப்பும் தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அட்டவணையும் வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.