மேலும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா: மொத்தம் 3 அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

தமிழகத்தில் ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் மின் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இதனையடுத்து தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மூன்றாவது அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா தொற்று பரவி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது தெரிந்ததே.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்,அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவதுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் ஆகியோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.