கமல்ஹாசனின் 'அல்வா' விமர்சனத்திற்கு செல்லூர் ராஜூ பதிலடி
- IndiaGlitz, [Sunday,February 02 2020]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒரு சில அம்சங்கள் ஏழை எளிய மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் பெரும்பாலும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமான பட்ஜெட் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். நடுத்தர வர்க்கத்தை பொறுத்த வரை வருமான வரி சலுகை இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டிருப்பது ஒரு சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதிக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் அவர்கள் ’அதிகாரிகளுக்கு அல்வா கொடுப்பதோடு ஆரம்பித்த பட்ஜெட், மக்களுக்கு அல்வா கொடுத்ததோடு முடிந்துள்ளது’ என தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.
கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டை முழுவதும் படித்து பார்த்து கமலஹாசன் கூற வேண்டும் என்றும் இமேஜ்க்காக குரல் கொடுத்துவிட்டு ’இந்தியன் 2’ படத்தில் நடிக்க கமல் சென்று விடுவார்’ என்றும் கூறினார். மேலும் இந்த பட்ஜெட் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.