சினிமா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்
- IndiaGlitz, [Tuesday,July 07 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு துறைகள் முடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக திரை உலகில் படப்பிடிப்புகள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெறவில்லை என்பதும் திரையரங்குகள் திறக்கப்படாததால் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் திரையுலகை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசியும் பட்டினியுமாக உள்ளனர்.
இந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் படப்பிடிப்புக்கும் ஒரு சில மாநிலங்களில் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கும் அனுமதி அளித்துள்ள நிலையில் திரைப்பட படப்பிடிப்பு நாடு முழுவதும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி திரையுலகினர் பலர் மனதில் எழுந்தது. தற்போதைய ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் விரைவில் திரைப்பட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்குவது தொடர்பாக விரைவில் விதிமுறைகள் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சற்றுமுன் கூறியுள்ளார். இதனை அடுத்து விரைவில் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு மற்றும் அதற்கான நிபந்தனைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திரையுலகினர் மகிழ்ச்சியில் உள்ளனர்