ஒலிம்பிக் வீரர்களுக்கு பண்ணை வீட்டில் விருந்து வைத்து அசத்திய முதல்வர்!
- IndiaGlitz, [Thursday,September 09 2021]
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்ததில் இருந்தே படு உற்சாகத்தில் இருக்கிறார். காரணம் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் கடந்த 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர். இந்த அணியில் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து முதல்வர் அமரிந்தர் சிங் பஞ்சாப் வீரர்களுக்கு தலா 2 கோடி பரிசுத் தொகையும் அறிவித்து இருந்தார். அதோடு வேலைவாய்ப்புகளில் பல சலுகைகளையும் அறிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது பஞ்சாப்பில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு முதல்வர் தன்னுடைய பண்ணை வீட்டில் மட்டன், சிக்கன் என்று வகைவகையாகத் தானே சமைத்து அவர்களுக்கு தன் கையாலேயே பரிமாறவும் செய்திருக்கிறார்.
விருந்தில் பஞ்சாப் வீரர்களுடன் ஹரியாணாவில் இருந்து ஈட்டி எறிதல் பிரிவில் விளையாடி இந்தியாவிற்கு தங்கம் வென்றுதந்த நீரஜ் சோப்ராவும் கலந்து கொண்டார். முதல்வர் அமரிந்தர் சிங் வீரர்களுக்கு தனது கையாலேயே உணவு பரிமாறும் காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கூடவே அந்த உணவுகள் அனைத்தையும் முதல்வரே சமைத்தார் என்றும் தகவல் கூறப்படுகிறது.