தமிழகத்தில் உயரும் கருப்பு பூஞ்சை பாதிப்பு...! பாதுகாப்பாக இருங்க மக்களே....!
- IndiaGlitz, [Wednesday,May 26 2021]
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எணிக்கை 256-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 256 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியிருப்பதாவது,
நம் மாநிலத்தில் 256 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதை தடுக்க மருத்துவக்குழுவுடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளோம். கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால், அதை தடுக்க மக்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருநெல்வேலியில் 500 படுக்கைகள் விரைவில் அமைக்க ஏற்பாடு செய்து தரப்படும். கொரோனா வைரஸ் மரணங்கள் குறித்து மறைக்கவேண்டாம் என அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது. கிரமப்புறங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள், மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
நேற்றளவில் நெல்லை மாவட்டத்தில் மட்டும், சுமார் 2800-க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 75 லட்சம் மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இங்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
3.5 கோடி தடுப்பூசிகள் தமிழகத்திற்கு பெற உலகளாவிய டெண்டர் கேட்கப்பட்டுள்ளது. வரும் ஜூன்-6-ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு தமிழகத்திற்கு விரைவில் கொரோனா தடுப்பூசி ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார்.