திரையரங்குகள் திறப்பு: மத்திய அரசின் அறிவிப்பு குறித்து கடம்பூர் ராஜூ கருத்து!
- IndiaGlitz, [Thursday,October 01 2020]
தமிழகத்தில் இன்று முதல் அடுத்தகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கில் அமல்படுத்தப்படும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால் இந்த தளர்வில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் அதே நேரத்தில் நேற்று மத்திய அரசு வெளியிட்ட அடுத்தகட்ட ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளில் 50 சதவீத இருக்கைகளுடன் அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது. மாநில அரசு திரையரங்குகள் திறக்க அனுமதி தராத நிலையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பு குறித்து தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியபோது ’திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி இந்த அறிவிப்பு தமிழகத்தில் செயல்படுத்தப்படும்’ என்று கூறினார். எனவே அக்டோபர் 15 முதல் தமிழகத்திலும் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.