கட்டாயமாக திரையரங்குகளை திறக்க மத்திய அரசு சொல்லவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
- IndiaGlitz, [Saturday,October 10 2020]
திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளதே தவிர கட்டாயமாக திரையரங்குகளை திறக்க மத்திய அரசு திறக்க சொல்லவில்லை என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த மார்ச் மாதம் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு திரைஅரங்குகளை அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் அதற்காக வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்தது, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும் பார்வையாளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் உணவுப்பொருள் பண்டங்கள் விற்கும் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு காட்சிக்கும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது
இந்த நிலையில் மத்திய அரசு அக்டோபர் 15 முதல் திரை அரங்குகள் திறக்க அனுமதித்தாலும் மாநில அரசு இது குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்ததால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதே தவிர கட்டாயமாக திரையரங்குகளை திறக்கச் சொல்லி உத்தரவிடவில்லை
இருப்பினும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை, திரை அரங்குகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் தெரிவித்துள்ளார்
அமைச்சரின் இந்த பேட்டியில் இருந்து நாடு முழுவதும் அக்டோபர் 15 முதல் திரை அரங்குகள் திறக்கப்பட்டாலும் தமிழகத்தில் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது