விஜய் படம் ரிலீஸ் ஆனதே எங்களால்தான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
- IndiaGlitz, [Saturday,September 14 2019]
விஜய் நடித்த ’சர்க்கார்’ படத்தின் ரிலீஸின்போது அதிமுகவினர் அப்படம் திரையிட்ட திரையரங்குகளில் பிரச்சனை செய்து பேனர்களை கிழித்து விவகாரம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ’சர்க்கார் படத்தின் போது பிரச்சனை செய்தது எங்கள் கட்சியின் தொண்டர்கள் தான் என்றும், நான் அமைச்சராக இருந்தாலும் அடிப்படையில் அதிமுக தொண்டன் என்றும் எங்கள் தலைவியைப் பற்றி சர்ச்சைக்குரிய ஒரு காட்சி இருக்கும் போது அதனை எதிர்த்து நாங்கள் குரல் கொடுக்கத் தான் செய்வோம் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் எங்களிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுத்ததும் எங்கள் அரசு தான் என்று கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை அணுகி சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்று கூறியதால் அக்காட்சிகள் நீக்கப்பட்டது என்றும் கூறினார்.
மேலும் விஜய் நடித்த ’மெர்சல்’ படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையின் போது அரசு தலையிட்டு சுமுகமாக பிரச்சனையை தீர்த்து வைத்தது என்றும், விஜய் முதலமைச்சரை நேரில் சந்தித்த போது அவருக்காக முதல்வர் மூன்று மணி நேரம் ஒதுக்கினார் என்பதும், விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆவதற்கு காரணமே எங்கள் அரசு தான் என்றும் கூறினார். இதனை விஜய் மற்றும் அட்லி ஆகியோர்கள் மறுக்க முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விஜய் மீது எங்களுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருந்திருருந்தால் அந்தப் பிரச்சினையின் போது நாங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தாலே படம் வெளியாகி இருக்காது என்றும் இந்த விஷயம் நண்பர் விஜய் அவர்களுக்கு தெரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறினார்.