விஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
- IndiaGlitz, [Saturday,September 21 2019]
விஜய் நடித்த திரைப்படம் வெளிவந்தாலும் சரி, விஜய் நடித்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றாலும் சரி, அதில் ஏதாவது சர்ச்சை கிளம்புவதும், அதற்கு அரசியல்வாதிகள் பதிலடி கொடுத்து அந்த படத்திற்கு இலவச விளம்பரம் தேடி தருவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் தேசிய விஜய், ’சுபஸ்ரீ’ விவகாரத்தில் கைது செய்ய வேண்டிய குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யாமல், லாரி டிரைவரை கைது செய்துள்ளதாகவும், போஸ்டர் அடுத்தவர்களின் பிரின்டிங் பிரஸ்ஸை மூடியுள்ளதாகவும் பேசினார். மேலும் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அவரை அங்கு வைத்தால் வேலை சரியாக நடக்கும் என்றும் அவர் அவர் ஒரு கருத்தை தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜய்யின் இந்த கருத்துக்கு செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு என்று பதிலளித்துள்ளார். மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளார்கள் என்றும், விஜய் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பேச்சை மக்கள் கேட்பார்கள் என்று விஜய் நினைத்து கொண்டால் அது அவருடைய அறியாமைதான் என்றும், படம் ஓடுவதற்காக நடிகர்கள் பரபரப்பாக பேசுவதாகவும், விஜய் யாருடைய பேச்சை கேட்டு இவ்வாறு பேசினார் என தெரியவில்லை’ என்றும் அமைச்சர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.