திரையரங்குகள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை
- IndiaGlitz, [Monday,May 18 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும், கோலிவுட் திரையுலகில் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இதனால் திரையரங்க ஊழியர்கள் மற்றும் திரைப்பட படப்பிடிப்பில் பணிபுரியும் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை இன்றி வருமானமின்றி வறுமையில் வாடுகின்றனர்
இந்த நிலையில் சமீபத்தில் போஸ்ட் புரோடக்சன்ஸ் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்ததை அடுத்து ’மாஸ்டர்’ ’இந்தியன் 2’ உள்பட பல திரைப்படங்களில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் தற்போது பல தளர்வுகள் அரசின் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் திறப்பது குறித்தும் படப்பிடிப்புகளை தொடர அனுமதி வழங்குவது குறித்தும் திரையுலகினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்
இந்த நிலையில் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து சென்னையில் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திரை அரங்குகளின் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ‘வீடு மற்றும் அரங்கினுள் சின்னத்திரை படத்தின் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டுள்ளோம் என்றும் அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார்.
மேலும் சினிமா படப்பிடிப்பு பணிகளுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க கோரிக்கை விடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி சார்பில் ரூபாய் 10.25 லட்சம் வழங்கப்பட்டதாகவும் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது