காவிரி பிரச்சனை குறித்து கமலுக்கு என்ன தெரியும்? அமைச்சர் ஜெயகுமார்
- IndiaGlitz, [Wednesday,April 04 2018]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுகவினர் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் குறித்து கருத்து கூறிய நடிகர் கமல்ஹாசன், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. ஆளுங்கட்சியின் போலியான உண்ணாவிரத போராட்டங்களால் எவ்வித நன்மையும் நடக்கப் போவதில்லை. மத்திய அரசின் எடுபிடி போல் மாநில அரசு நடந்து கொள்கிறது. இன்று நடக்கும் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கும் என்றும் கூறியிருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: கமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதில் கைதேர்ந்தவர். காவிரி பிரச்சனையின் மூலாதாரமே திமுக என்பதை மறைத்துவிட்டு அவர் அதிமுகவை விமர்சனம் செய்து வருகிறார். கமல்ஹாசன் நடிப்பில் சிறந்து விளங்கலாம், ஆனால் அரசியலில் அவரால் எதுவும் செய்ய முடியாது. அரசியல்வாதி என ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கமல்ஹாசனுக்கு பக்குவம் கிடையாது.
காவிரி பிரச்சனை குறித்து கமலுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயகுமார், சென்னையில் இருந்து திருச்சி வரை ரயிலில் சென்றதை ஒரு சாதனை போல் எண்ணிக்கொண்டிருக்கிறார் என்றும், கமல்ஹாசனது அரசியலை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்' என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.