கட்சி ஆரம்பித்தால் டிடிவி நிலைதான் ரஜினிக்கு ஏற்படும்: தமிழக அமைச்சர்
- IndiaGlitz, [Friday,September 06 2019]
தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாகவே ரஜினி குறித்த செய்தி வெளிவராத நாளே இருக்காது என்று கூறலாம். ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும், அவர் கட்சி ஆரம்பிப்பாரா? மாட்டாரா? வேறு கட்சியில் இணைவாரா? கட்சி ஆரம்பித்தால் அவரால் வெற்றி பெற முடியுமா? என்பது குறித்த செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் சிலர் ரஜினியின் அரசியல் குறித்து அவ்வப்போது பேட்டி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அடுத்த ஆண்டு அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ’ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், புதிய கட்சி தொடங்கி 5 சதவீத வாக்குகளைப் பெற்ற டிடிவி தினகரனுக்கு நேர்ந்த நிலைதான், ரஜினிக்கும் ஏற்படும் என்று கூறினார்.
ஒரு வகையில் அமைச்சர் ஜெயகுமார் கூறியபடி இதுவரை தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்கிய விஜயகாந்த், கமல்ஹாசன், டிடிவி தினகரன் போன்றோர் தாங்கள் சந்தித்த முதல் தேர்தலில் 5 அல்லது அதற்கும் குறைவான சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர். அந்த பட்டியலில் ரஜினியும் சேர்வாரா? அல்லது கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி போல் ஆட்சியை பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்