கமல் பல்டி அடிச்சாலும் அவர் நினைத்தது மட்டும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

  • IndiaGlitz, [Friday,October 04 2019]

கடந்த சில நாட்களாக அதிமுக அரசு குறித்து கமல் பேசுவதும், அதற்கு அதிமுக அமைச்சர்கள் பதிலடி தருவதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கல்லூரி ஒன்றின் விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், அதிமுக அரசையும் அரசியல்வாதிகளையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் இந்த அரசு இந்த சமூகத்திற்கு தேவைதானா? என்ற ஒரு கேள்வியையும் அவர் எழுப்பினார். இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்த அரசு சமூகத்திற்கு தேவையான அரசா? இல்லையா? என்பதை கமல் தீர்மானம் செய்ய முடியாது. மக்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும். இதுவரை தமிழக வரலாற்றில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். எனவே கமல் என்ற ஒரு நடிகர் சொல்லிவிட்டால் அதனால் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படபோவதில்லை

மேலும் 'கமல் தோப்புக்கரணம் போட்டாலும் சரி, பல்டி அடிச்சாலும் சரி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. அதிமுக அரசை எதிர்த்து கருத்து கூறினால் மட்டுமே கமல் அரசியல் செய்ய முடியும் என்பதால் அவர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்' என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.