'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்
- IndiaGlitz, [Friday,October 18 2019]
தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அந்த படத்தில் நடித்த தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர்களை பாராட்டி தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அதில் பஞ்சமி நிலம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ், ’முரசொலி கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது தான் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்
இதற்கு பதிலடி கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் ’முரசொலி கட்டிடம் பட்டா நிலத்தில் கட்டப்பட்டது என்றும் பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டு இருந்தது என்பதை டாக்டர் ராம்தாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலக தயார் என்றும் சவால் விட்டிருந்தார்.
அசுரன் படத்தை வைத்து முக ஸ்டாலின் மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகிய இருவரும் அரசியல் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த அரசியலில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் இணைந்து உள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது: அசுரன் திரைப்படத்தில் வரும் வில்லன் வடக்கூரானை போன்றவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். படத்தில் வரும் நில அபகரிப்பு சார்ந்த கதைகள் அனைத்தும் திமுகவினருக்கு பொருந்தும்!” என்று கூறியுள்ளார்.
மொத்தத்தில் அசுரன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் திடீரென அரசியல் ஆக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு ஒரு வகையில் அந்த படத்திற்கு இலவச விளம்பரமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது