பிக்பாஸ் ஒரு கலாச்சார சீரழிவு: கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
- IndiaGlitz, [Wednesday,October 02 2019]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நூறாவது நாளை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வரும் ஞாயிறன்று இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும்.
இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு கலாச்சார சீரழிவு என்றும், அந்த வீடு ஒரு அலிபாபா குகை போன்று இருப்பதாகவும், வீட்டில் உள்ளவர்கள் பயந்து வெளியே ஓடி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அரசு தடை செய்யுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ’திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று கூறினார்.
மேலும் கமல்ஹாசன் குறித்து அவர் இன்னொரு கேள்விக்கு பதிலளித்த போது ’கமல் ஒரு இன்ஸ்டன்ட் சாம்பார் போன்றவர் என்றும், திடீரென கருத்து கூறுவார், பின்னர் திடீரென காணாமல் போய் விடுவார் என்றும், தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் செய்யும் அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர் என்றும் தெரிவித்தார்.
மேலும் நீட்தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ’வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் ஆள்மாறாட்டத்தை தொடங்கியதே கமல்ஹாசன்தான் என்றும், கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் அரசியல் பேசுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் நேற்று கமல்ஹாசன் பேசியபோது “அரசியல் பேசுவதில் இருந்து மாணவர்கள் விலகி நிற்கக்கூடாது. கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மாணவர்கள் ஒதுங்கி நிற்பதால்தான் கறை படிந்துள்ளது. மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலில் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்முகத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். வாரிசு அரசியல் சரியாக இருக்காது. அதற்காகவே ஜனநாயகம் வந்தது. ஆனால் தமிழக அரசியலில் குடும்ப அரசியலைப் பிரிக்க முடியாது’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.