சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிப்பது எப்போது? அமைச்சர் ஜெயகுமார் தகவல்

  • IndiaGlitz, [Thursday,June 01 2017]

சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையின் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ இரண்டாவது நாளாக இன்றும் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் தற்போது தீ கட்டுக்குள் உள்ளது. கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்துவிட்ட நிலையில் அபாயகரமாக உள்ள கட்டிடத்தின் மற்ற பகுதிகளையும் இடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கட்டிடத்தை இடிக்கும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனமும் இணைந்து செயல்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நிதியமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, 'இன்று மாலை 4 மணி முதல் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கப்படும். மூன்று நாட்களுக்குள் கட்டிடம் தரைமட்டம் ஆக்கப்படும். மேலும் இந்த பகுதி கட்டிடங்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் கட்டிடத்தை இடிக்க வெடிமருந்து பயன்படுத்தப்படாது.
மேலும் இயந்திரம் மற்றும் ஆட்களைக் கொண்டு கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்படும் என்றும் கட்டிடத்தை இடிக்கும் பணியில் மத்திய அரசின் ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர் ஜெயகுமார், கட்டிடம் இடிக்கும் பணிக்கு ஆகும் செலவு முழுவதும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.420 கோடி மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமானதாகவும் இதுவொரு தற்காலிக மதிப்பீடுதான் என்றும் முழு மதிப்பீடு பின்னர் கணக்கிடப்படும் என்றும் கூறப்படுகிறது.