கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டம்: அமைச்சர் சி.வி.சண்முகம்Â
- IndiaGlitz, [Sunday,July 16 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசை கடந்த சில மாதங்களாகவே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அமைச்சர்களும் அவ்வப்போது கமல்ஹாசன் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு அமைச்சர் கமல்ஹாசனை ஒருமையில் பேசிய சம்பவமும் நடந்தது.
இந்த நிலையில் விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
'பணத்திற்காக கமல் எந்த காரியத்தையும் செய்ய கூடியவர் என்றும், தமிழக அரசை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை என்றும் கூறிய அமைச்சர், கமலின் ஏற்பாட்டின் பேரிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரைப் பற்றி இழிவாக பேசிய கமல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கமல்ஹாசன் சர்வதேச அளவில் பிரபலமான ஒரு கலைஞர். அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இதுவரை இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அடுத்து மீண்டும் ஒரு திரையுலகை சேர்ந்தவர் முதல்வர் ஆகும் சூழ்நிலையை தற்போதைய அமைச்சர்களே ஏற்படுத்திவிடுவார்கள் என்று தோன்றுகிறது.