உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி: மருத்துவமனையின் அறிக்கை
- IndiaGlitz, [Tuesday,June 30 2020]
தமிழகத்திலும் தலைநகர் சென்னையிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிப்படைந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் அமைச்சர் தரப்பில் இருந்து இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு முதலில் செய்யப்பட்ட சோதனையில் கொரோனா அறிகுறி இல்லை என்றும் நார்மலாக இருந்ததாகவும், ஆனால் தற்போது எடுக்கப்பட்ட இரண்டாவது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஏற்கனவே தமிழகத்தின் ஐந்து எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அமைச்சர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது