பிரபல பாடகி சென்ற விமானம் மின்னல் தாக்கியதால் பரபரப்பு… பதறும் ரசிகர்கள்!
- IndiaGlitz, [Thursday,March 24 2022]
அமெரிக்காவின் பாப் இசை பாடகியும் நடிகையுமான மைலி சைரஸ் சென்ற விமானம் நேற்று பராகுவே செல்லும் வழியில் மோசமான புயலில் சிக்கிப் பின்னர் மின்னல் தாக்கியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் உலகம் முழுக்கவுள்ள மைலி சைரஸின் ரசிகர்கள் கடும் பதற்றம் அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
“சீ யு அகேன்“, “ரெக்கிங் பால்“ போன்ற ரெக்காட் பிரேக்கிங் பாடல்களை கொடுத்தவர் இசைக்கலைஞர் மைலி சைரஸ். பாடல் எழுதுவது, இசையமைப்பது, திரைப்படங்களில் நடிப்பது எனப் பல்வேறு திறமைகளைக் கொண்ட இவருக்கு உலகம் முழுக்கவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் டிவிட்டரில் இவரை 46 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் கொலம்பியாவில் உள்ள பொகோடா பகுதியில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மைலி சைரஸ் தனது குழுவுடன் பராகுவே நாட்டின் தலைநகர் அசன்சியனை நோக்கிப் பறந்து கொண்டிருந்தார். அங்கு நடைபெற இருந்த அசுன்சியோனிகா எனும் இசைத் திருவிழாவிற்கு இவர் தலைமை ஏற்க இருந்தார். இந்நிலையில் நேற்று பராகுவே நோக்கிச் செல்லும் வழியில் மைலி சைரஸ் சென்ற விமானம் மோசமான புயலில் சிக்கி பின்னர் மின்னல் வெட்டில் சிக்கியிருக்கிறது.
இதனால் அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டு அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பாடகி மைலி சைரஸ் மற்றும் அவரது இசைக்குழுவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இதனால் சிறிய அளவில் உடல்நலக் கோளாறை சந்தித்து இருப்பதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அசுன்சியோனிகா இசைத் திருவிழா ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.