மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மைக் டைசன்... தீயாய் பரவும் வீடியோ!

நாக் அவுட் மன்னன் மைக் டைசன் பாக்சிங்குங்கு மட்டுமல்ல, சர்ச்சைக்கும் பெயர்பெற்றவர் என்பது ரசிகர்கள் அறிந்ததுதான். போதைப்பொருள், பொது இடங்களில் வன்முறை என்று எப்போதும் சர்ச்சைகளுடனே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் பற்றிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

55 வயதான மைக் டைசன் இதுவரை 58 பாக்சிங் போட்டிகளில் கலந்துகொண்டு 50 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளார். இதில் 44 போட்டிகளில் எதிராளியை அவர் நாக் அவுட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாக்சிங்கை தவிர சமீபத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகிவரும் “லிகர்“ படத்திற்காக நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துவருகிறார்.

நாக் அவுட்டிற்கு பெயர்போன மைக் டைசனுக்கு உலகம் முழுக்கவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர் செல்லும் இடங்களில் ரசிகர்கள் செல்பி எடுக்க முயற்சிப்பதும் அதை விரும்பாத டைசன் அவர்களை தாக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புளோரிடாவிற்கு விமானத்தின் முதல் வகுப்பில் மைக் டைசன் பயணித்துள்ளார். அவரைப் பார்த்த சக பயணி ஒருவர் டைசனுடன் பேச்சுக்கொடுத்து செல்பி எடுக்க முயற்சித்து இருக்கிறார். இதனால் கோபமடைந்த டைசன் அந்த பயணியின் முகத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூகவலைத் தளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரபலங்கள் சிலர் பொது இடங்களில் இதுபோன்ற தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர் என்றாலும் மைக் டைசன் அவர்களை கொடூரமாகத் தாக்கிவிடுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.