இந்திய எல்லையில் 60,000 சீன இராணுவ வீரர்கள்… பீதியைக் கிளப்பும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய எல்லையில் 60 ஆயிரம் சீன இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியா தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த விவகாரம் குவாட் நாடுகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
குவாட் எனும் அமைப்பின்கீழ் இந்திய- பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து உள்ளன. இந்த குவாட் அமைப்பிற்கான ஆலோசனைக் கூட்டம் கொரோனா தாக்குதலுக்கு பிறகு தற்போது நடைபெற்று இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் குவாட் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அந்தந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்படி நடைபெற்றக் கூட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியாவும் கலந்து கொண்டார். கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த மைக் பாம்பியா, “தங்களது வடக்கு எல்லைப் பகுதியில் 60,000 சீன இராணுவ வீரர்கள் குவிக்கப் பட்டுள்ளதை இந்திய தரப்பு அறிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் பெரிய ஜனநாயக நாடுகளாகவும் சக்தி வாய்ந்த பொருளாதாரத்தை கொண்டதாகவும் உள்ள இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளைக் கொண்ட குவாட் என்றழைக்கப்படும் குழுவை சேர்ந்த நாடுகளின் சக வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்தேன். இந்த நாடுகள் அனைத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து அச்சுறுத்தல்கள் நிறைந்த உண்மையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளன” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மைக் பாம்பியாவின் கருத்தைக் குறித்து இந்திய வெளியுறவுத் துறையோ அல்லது இந்திய இராணுவமோ எந்த திட்டவட்டமான கருத்தையும் வெளியிடவில்லை. இதற்கு முன்னதாக சீன இராணுவ வீரர்கள் எல்லைப் பகுதியில் குவிக்கப் பட்டிருந்ததை இந்திய இராணுவம் ஒப்புக்கொண்டது. சீன இராணுவத்தைப் போலவே இந்திய இராணுவமும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments