கடும் உணவு பஞ்சத்தால் தத்தளிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்!!! மேலும், 10 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு!!!
- IndiaGlitz, [Friday,May 22 2020]
கொரோனா மத்திய கிழக்கு நாடுகளில் கடும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஈரானில் மட்டும் 10 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும், ஏமன் மற்றம் காசா பகுதிகளிலும் கொரோனா நோய்த் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாகக் கூறப்படுகிறது.
ஏமன்- மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்ள மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உண்ண முடியும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். ஏழை நாடான இதற்கு ஐ.நா வின் உணவு வழங்கல் திட்ட அமைப்பு நெடுங்காலமாக உதவி வந்ததும் குறிப்பிடத் தக்கது. கொரோனா ஏற்படுத்தி இருக்கும் கடும் பொருளாதார சரிவினால் ஐ.நா சபைக்கு நன்கொடை வழங்குவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது. கையிருப்பு குறைந்த காரணத்தால் ஐ.நா. உணவு வழங்கல் திட்ட அமைப்பு தனது உதவிகளை 60 விழுக்காடு அளவிற்கு குறைத்து இருக்கிறது. இதனால் ஏமனில் கடும் வறுமை நிலவி வருகிறது. மேலும் தெற்கு ஏமனில் உள்ள மருத்துவ மனைகளில் கொரோனாவால் அனுமதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
முன்னதாக அந்நாட்டில் 5 ஆண்டு காலம் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றத்தால் மேலும் நிலைமை மோசமாகி இருக்கிறது. சுகாதாரக் கட்டமைப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏமனில் 18 விழுக்காடு பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடுமையான நீர்ப் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறையும் மக்களை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியிருக்கிறது. WHO வின் கணிப்புப்படி ஏமனில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காடு மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் என எச்சரித்து உள்ளது. அந்நாட்டில், கொரோனா உயிரிழப்புகள் 40 ஆயிரமாக இருக்கும் எனவும் WHO கூறியிருக்கிறது.
ஏமனில் கொரோனாவால் உயிரிழப்போர் பெரும்பாலும் இளம் வயதுடையவர்கள் என்பதும் கவலை அளிக்கும் தகவலாக இருக்கிறது. அதாவது ஐரோப்பிய நாடுகளில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகளைப் போல இந்நாட்டில் 40 – 60 வயதுடைய கொரோனா நோயாளிகளுக்கு தீவிரச் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோமாலியா – இந்நாட்டில் கொரோனா பாதிப்பு வெறுமனே 4 ஆக பதிவாகியிருக்கிறது. ஒரு உயிரிழப்பும் நிகழ்ந்து இருக்கிறது. ஆனாலும் கடும் பொருளாதார வீழ்ச்சி வறுமை, பற்றாக்குறை, உணவுப் பஞ்சம் போன்ற தாக்கத்தினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாக்கப் பட்டுள்ளனர்.
காசா – இந்தப் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் 35 கொரோனா நோய்த் தொற்று பதிவாகியிருக்கிறது. மேலும் 55 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதி செய்திருக்கிறது. உள்நாட்டு முற்றுகையில் இந்நாடு வெகு காலம் இருந்ததால் சுகாதாரக் கட்டமைப்புகள் முற்றிலும் அழிந்து நாடே மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.
எகிப்து – எகிப்து அரசு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்து வெளியிடுவதாக தொடர்ந்து ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. வெறுமனே 15 ஆயிரம் அளவில் கூறப்படும் கொரோனா எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டி சென்றிருக்கம் என வல்லுநர்கள் ஊகிக்கின்றனர். அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை சிறையில் அடைத்து விடுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. மார்ச் மாதத்தில் அந்நாட்டில் நோய்த் தொற்றின் எண்ணிக்கை 19 ஆயிரம் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது 15 ஆயிரம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜோர்டன் – பொருளாதார குறைவில் தத்தளித்து வரும் இன்னொரு நாடு ஜோர்டன். சர்வதேச நாணய நிதியம் இந்நாட்டு மக்களை உணவுப் பஞ்சத்தில் இருந்து விடுவிக்க 400 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.