மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 மென்பொருளை முடக்கப்போவதாக அறிவிப்பு
- IndiaGlitz, [Saturday,January 04 2020]
கணினிக்கான மென்பொருள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள்களே பெரும்பாலான கணினிகளில் பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் மென்பொருட்களைத் தொடர்ந்து புதுப்பிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவத்தின் விண்டோஸ் 7 மென்பொருளின் விற்பனை வரும் 14 ஆம் தேதிக்குப்பின்னர் நிறுத்தப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவம் விண்டோஸ் 10 மென்பொருளை அறிமுகம் செய்தது. இம்மென்பொருள் பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை எனப் பல வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 7 ஐ தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 ஐ பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் விதமாக ஜனவரி 14, 2020 முதல் விண்டோஸ் 7 மென்பொருள் விற்பனையை நிறுத்திக்கொள்வதாக, அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
பயனாளர்கள் தற்போது செய்ய வேண்டியது
விண்டோஸ் 7 ஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 10 ஐ இணையத்தில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனை நிறுத்தப்படுவதால் ஜனவரி 14 க்குப் பின்பு விண்டோஸ் 7 முழுவதுமாகச் செயல்படாது எனப் பொருள் கொள்ளக்கூடாது. ஜனவரி 14 க்குப் பின்பும் விண்டோஸ் 7 தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். ஆனால் விண்டோஸ் 7 க்கான அதிகாரப்பூர்வமான ஆதரவை மைக்ரோசாப்ட் நிறுத்திக்கொள்ளும் என்பதால் மென்பொருள் செயல்படுவதற்கான மேம்பாட்டு வசதிகளோ, வைரஸை தடுப்பதற்கான வசதிகளோ இருக்காது. குறிப்பாக மென்பொருளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்காது. எனவேதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் மென்பொருள் நிறுத்தப்படுவதற்கு முன்பே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 7 க்கு அடுத்த புதுப்பிப்பான விண்டோஸ் 10 க்கு மாறிவிடுவது சிறந்த வழி என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது