அதிபர் பதவிக்கு தகுதியே இல்லாதவர்… ஒபாமா மனைவி மிச்செலின் காட்டமான குற்றச்சாட்டு!!!
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
அமெரிக்க அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். நேற்று அமெரிக்காவில் தொடங்கப்பட்டு இருக்கும் ஜனநயாகக் கட்சி மாநாட்டில் இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது. அந்தக் கூட்டத்தொடரில் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செலும் கலந்து கொண்டார். அவரது உரையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் தகுதியே இல்லாதவர் எனக் கூறி கடும் பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
வருகிற தேர்தலில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் நிலையில் இத்தகைய கருத்து அவரது மதிப்பீட்டை குறைக்கும் விதத்தில் அமையுமோ என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பல மாதங்களாக அமெரிக்காவில் நடத்தப்படும் அடுத்த அதிபர் யார் என்ற கருத்துக்கணிப்பில் தொடர்ந்து ஜோ பிடனே முன்னிலை வகித்து வருவதாகவும் ட்ரம்பின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அதிபர் பதவிக்கு தகுதியே இல்லாத ஒருவர் அமெரிக்க அதிபராக இருக்கிறார் என ஒபாமாவின் மனைவி தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மிச்செல் தன்னுடைய உரையில், “நமது நாட்டின் தவறான அதிபர் ட்ரம்ப், அவரது வேலையை அவர் நன்றாக செய்வார் என்று எதிர்பார்த்து அவருக்கு போதிய அவகாசத்தை நாம் வழங்கி விட்டோம். இனியும் தர முடியாது. அவர் இந்த பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார். நாம் யார் வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அவராக அவரால் செயல்பட முடியவில்லை. ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப். இந்த பதவியில் இருப்பவர்களுக்கு தெளிவான முடிவு, சிந்தனை வேண்டும். அது அவருக்கு இல்லை. அடிப்படை தேவைகளுக்கு மக்கள் திண்டாடி வருகின்றனர்.
வாக்காளர்கள் ஜோ பிடனுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும். உங்களது தபால் வாக்குகளை வீணடித்து விடாதீர்கள். சரியாக பயன்படுத்துங்கள். நாட்டில் ஊழலை ஒழிக்க ஜோ பிடன்தான் சரியான தேர்வாக இருப்பார். நம்முடைய வாழ்க்கையை முடிவு செய்யக்கூடியது இந்த தேர்தல். நமது வாழ்க்கை இந்த தேர்தலை சார்ந்து இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.