மீண்டும் வெடித்த கிரிக்கெட் பிட்ச் சர்ச்சை… வீட்டுத் தோட்டத்தைக் கொத்தி விளக்கம் அளித்த இங். வீரர்!
- IndiaGlitz, [Thursday,March 04 2021] Sports News
இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி அகமதாபாத் மைதானத்தில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களை குவித்து உள்ளது. இதில் இந்திய வீரர் அக்சர் படேல் 2 விக்கெட்டையும் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.
இந்நிலையில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தை குறித்த சர்ச்சை தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிட்ச் முழுவதும் களிமண் நிரம்பி, இதுமாதிரியான போட்டிகளில் விளையாடினால் விளையாட்டே மறந்து விடும் என மற்ற வீரர்கள் கதறும் அளவிற்கு இந்த பிட்ச் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதிலும் இங்கிலாந்து அணி வீரர்கள் ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றனர். இதனால் நடந்து முடிந்த 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெறும் ஒன்றரை நாட்களில் முடிந்தே விட்டது.
இந்நிலையில் 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று துவங்கி உள்ளது. இந்தப் போட்டியிலும் ஸ்பின் பந்து வீச்சிற்கு ஏற்றாற்போலவே கிரிக்கெட் பிட்ச் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பிசிசிஐயின் செயல்பாடு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தன்னுடைய வீட்டு தோட்டத்தை உழுது அந்த நிலத்தோடு அகமதாபாத் மைதானத்தை ஒப்பிட்டு உள்ளார். மேலும் தான் விளக்கம் அளித்த வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
மேலும் 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கும் போது இந்திய கேப்டன் விராட் கோலியிடம் பிட்ச் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளித்த விராட் கோலி, இந்திய அணியின் பலமே எந்த பிட்சாக இருந்தாலும் அதில் கலந்து கொண்டு விளையாடுவதுதான். நாங்கள் ஒருபோதும் பிட்ச் குறித்து விமர்சனம் தெரிவிப்பதே இல்லை எனக்கூறி இருந்தார்.
விராட் கோலியின் இந்த பதிலால் மேலும் கோபம் அடைந்த இங்கிலாந்து வீரர் வாகன் இதற்கும் தக்கப் பதிலடி கொடுத்து உள்ளார். அதில், இந்தியக் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்டம் இழந்து வெளியே வரும்போது பிட்ச் தட்டையாக இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த பதிதில் பிட்ச் குறித்த விமர்சனம் எதுவும் இல்லையா? தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்து உள்ளார். இத்தகைய விவாதத்திற்கு இடையே அகமதாபாத் மைதானம் மேலும் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது.