'விஜய் 60' படத்தில் நடிப்பது குறித்து மியா ஜார்ஜ் கூறிய முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,January 13 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 60' படத்தில் 'அமரகாவியம்', 'இன்று நேற்று நாளை' போன்ற படங்களில் நடித்த நடிகை மியா ஜார்ஜ் நடிக்கவுள்ளதாக நேற்று பரபரப்பாக செய்தி வெளிவந்தது. இந்த செய்தி மியா ஜார்ஜின் டுவிட்டர் பக்கத்தில் வந்த செய்தியை அடிப்படையாக கொண்டு பரவி வந்தது.

இந்நிலையில் இன்று தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் மியா ஜார்ஜ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 'விஜய் 60' படத்தின் நான் நடிப்பதாக டுவிட்டரில் எனது பெயரில் இருந்த பக்கத்தில் வந்த செய்தியில் உண்மை இல்லை. எனக்கு டுவிட்டரில் அக்கவுண்டே இல்லை. விஜய் 60' படத்தில் நான் நடிக்கவுள்ளதாக போலியான டுவிட்டர் பக்கத்தில் வந்த செய்தியினை யாரும் நம்ப வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த படத்தில் 'காக்கா முட்டை' நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக வந்த செய்தியும் இன்னும் படக்குழுவினர்களால் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.