சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு ஜெயில்: நீதிமன்றம் அதிரடி
- IndiaGlitz, [Friday,November 17 2017]
கடந்த சில மாதங்களாகவே சசிகலா குடும்பத்தினர்களுக்கு எதிராக வலை பின்னப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதலில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்து அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்
இந்த நிலையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி சசிகலா குடும்பத்தினர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு எதிரான சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
லண்டனில் இருந்து போலி ஆவணங்கள் மூலம், தமிழரசி பப்ளிகேஷன் என்ற நிறுவனத்தின் பெயரில் நடராஜன் மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர் கடந்த 1994ஆம் ஆண்டு லெக்சிஸ் என்ற சொகுசு காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.1.84 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடராஜன் சமீபத்தில் தான் உடல்நலமின்றி அறுவை சிகிச்சை செய்து வீடுதிரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் சசிகலாவும் அவரது கணவரும் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.